நடிகர் விஷால் வீட்டில் நகைகள் திருட்டு

சென்னை அண்ணாநகரில் நடிகர் விஷாலின் வீடு உள்ளது. இவரது வீட்டில் இருந்த தங்கமோதிரம், கம்மல் மற்றும் வளையல்கள் திடீரென காணவில்லை. யாரோ திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து விஷாலின் மேலாளர் ரகுபதி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரில், ‘புஷ்பா என்ற பெண் எங்கள் வீட்டில் வேலை செய்து வந்தார். அவர் தற்போது வேலைக்கு வரவில்லை. அவர் மீது சந்தேகம் உள்ளது’ என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிங்கத்துடன் இணைந்து நடிப்பேன்: கார்த்தி நம்பிக்கை

நடிகர் கார்த்தி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“சினிமாவில் கதைதான் முக்கியம். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே கதை தேர்வில் நான் கவனமாக இருக்கிறேன். நல்ல கதையாகவும் என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்படியும் பார்த்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தில் இருந்து ஒவ்வொரு கதையும் எனக்கு வித்தியாசமாகவே அமைந்துள்ளன.

‘நான் மகான் அல்ல’ படத்தில் ஒரு மாதிரியும் ‘சிறுத்தை’ படத்தில் இன்னொரு மாதிரியும் வந்தேன். காஸ்மோரா படத்தில் வேறொரு பரிணாமம் இருந்தது. சகுனி அரசியல் படமாக வந்தது. இந்தியில் வந்த ‘தங்கல்’ மற்றும் பாகுபலி படங்களை பார்த்தபோது அதுமாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

‘தங்கல்’ பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தாலும் கடைசியில் கதாநாயகனே பிரதானமாக தெரிந்தார். ‘மனம்’ மாதிரியான படங்களில் நடிக்கவும் ஆசை உள்ளது. தற்போது நான் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் வித்தியாசமான கதை. இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறேன்.

போலீசார் காவல் பணிகளில் ஈடுபடுகிறார்கள். குற்றங்களை தடுக்க ரோந்து செல்கிறார்கள். இவற்றை தவிர்த்து அவர்களுக்கு இருக்கும் சொந்த வாழ்க்கையை இந்த படம் பேசும். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகி உள்ளது. சதுரங்கம் படத்தை எடுத்து பிரபலமான வினோத் டைரக்டு செய்துள்ளார். ரகுல்பிரீத்சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதிரடி படமாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ தயாராகி உள்ளது. ‘ஆர்கானிக்’ உடைகளை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளோம். சூர்யாவுடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன். அதற்கான கதை அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிப்போம். நடிகர் சங்க கட்டிட நிதி திரட்டுவதற்காக நடிக்க இருந்த பட வேலைகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.”

இவ்வாறு கார்த்தி கூறினார்.

500-வது ரஞ்சி போட்டி: டிரா செய்து மோசமான வரலாற்று பதிவை தவிர்த்தது மும்பை

ரஞ்சி டிராபியின் 5-வது சுற்று லீக் ஆட்டங்கள் கடந்த 9-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கியது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை- பரோடா அணிகள் மோதின. இந்த போட்டி மும்பைக்கு 500-வது ரஞ்சி போட்டியாகும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் வெற்றி பெற்று சரித்திர வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்று மும்பை அணி விரும்பியது.

போட்டியில் டாஸ் வென்ற பரோடா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய மும்பை அணி பரோடாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 171 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பரோடா 9 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

404 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் மும்பை 4 விக்கெட் இழப்பிற்கு 29 ஓவரில் 102 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 28 ரன்னுடனும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கைவசம் 6 விக்கெட்டுக்கள் மிச்சம் இருந்த மும்பை 302 ரன்கள் பின்தங்கியிருந்தது.

இன்று 4-வது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. 6 விக்கெட்டுக்களை வைத்துக் கொண்டு எப்படியாவது டிரா செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் மும்பை அணி களம் இறங்கியது. ரகானே, சூர்யகுமார் மிகவும் மந்தமாக விளையாடினார்கள். அணியின் ஸ்கோர் 125 ரன்னாக இருக்கும்போது ரகானே 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 45 ரன்னில் ஆட்டம் இழந்தாலும் 134 பந்துகளை சந்தித்தார். இன்று இந்த ஜோடி 19.1 ஓவர்களை சந்தித்தது.

அடுத்து சூர்யகுமார் யாதவ் உடன் லாட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் மிகவும் மந்தமாக விளையாடியது. இந்த ஜோடி 75-வது ஓவர் வரை தாக்குப்பிடித்தது. சூர்யகுமார் யாதவ் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். சூர்யகுமார் யாதவ் – லாட் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 27 ஓவர்கள் தாக்குப்பிடித்தனர். 5-வது மற்றும் 6-வது ஜோடி இன்று 46 ஓவர்கள் தாக்குப்பிடித்தது.

7-வது விக்கெட்டுக்கு லாட் உடன் அபிஷேக் நாயர் ஜோடி சேர்ந்தார். 44 ஓவர்கள் தாக்குப்பிடித்துவிட்டால் டிரா செய்து விடலாம் என லாட் – அபிஷேக் நாயர் ஜோடி நினைத்தது. அபிஷேக் நாயர் ரன்ஏதும் அடிக்காமல் அப்படியே பந்துகளை எதிர்கொண்டார். மறுமனையில் லாட் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடினார்.

அபிஷேக் நாயர் 108 பந்துகளை சந்தித்து 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 18 ஓவர்கள் தாக்குப்பிடித்து பரோடாவின் வெற்றிக்கு செக் வைத்தார் அபிஷேக். அபிஷேக் அவுட்டாகும்போது மும்பை அணி 109.5 ஓவரில் 254 ரன்கள் எடுத்திருந்தது. இவர் லாட் உடன் இணைந்து 34.5 ஓவர்கள் விளையாடினார். மூன்று விக்கெட்டுக்கு 80.5 ஓவர்களை கழித்தனர். அதன்பின் ஆட்டம் முடிய சுமார் 11 ஓவர்களே இருந்தது.

பரோடா 10.5 ஒவர்கள் வீசிய நிலையில் லாட் – குல்கர்னி விக்கெட்டை பிரிக்க முடியவில்லை. இதனால் மும்பை 120.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டியை முடித்துக் கொள்ள இரண்டு அணி கேப்டன்களும் முடிவு செய்தனர். இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

500-வது போட்டியில் தோல்வியை சந்தித்து மோசமான வரலாற்றை மும்பை அணி பதிவு செய்யும் என்று நினைக்கையில் பேட்ஸ்மேன்கள் நிலையாக நின்று மோசமான வரலாற்றை மாற்றிவிட்டனர்.

லாட் 238 பந்துகளை சந்தித்து 71 ரன்களுடனும், குல்கர்னி 31 பந்துகளை சந்தித்து 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு

தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் தலைவர் தேர்தல் நடந்தது. தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்திய பேட்மிண்டன் சங்க செயலாளர் புனியா சவுத்ரி, கர்நாடக பேட்மிண்டன் சங்க தலைவர் என்.சி.சுதிர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி டேனியல் ஆகியோர் தேர்தல் கண்காணிப்பாளராக இருந்து இந்த தேர்தலை நடத்தினார்கள். சாம்பியன் பட்டம் வென்ற அனைத்து மாவட்ட வீரர்-வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ‘என்னை மீண்டும் தலைவராக தேர்வு செய்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழக பேட்மிண்டன் வீரர்கள் தேசிய அளவில் மட்டுமின்றி ஆசிய, காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற வைக்கும் வகையில் கடுமையாக உழைப்பேன்’ என்று தெரிவித்தார்.

சச்சின் 38 வயதில் உலகக்கோப்பை தொடரில் ஆடிய போது யாரும் ஒன்றும் சொல்லவில்லை: கபில்தேவ்

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டோனி இடம் பெற்றுள்ளது தொடர்பான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் டோனி 20 ஓவர் போட்டியில் இருந்து விலகி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ். லட்சுமண், அகர்கர், ஆகாஷ் சோப்ரா ஆகியோர் விமர்சித்து இருந்தனர். முன்னாள் கேப்டன் கங்குலியும் கிட்டத்தட்ட இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார்.

அதே நேரத்தில் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, முன்னாள் கேப்டன் கவாஸ்கர், காம்பீர் ஆகியோர் டோனிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தன் மீதான விமர்சனம் குறித்து டோனி கூறும் போது எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. அதை மதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் டோனிக்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஒரு சில ஆட்டத்தை வைத்து டோனியை ஏன்? விமர்சனம் செய்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வயது ஒரு பெரிய வி‌ஷயம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திறமைதான் முக்கியம்.

2011-ல் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தெண்டுல்கர் ஆடிய போது அவரது வயது 38 அப்போது தெண்டுல்கரை யாரும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இப்போது டோனியின் ஓய்வு குறித்து மட்டுமே பேசப்படுகிறது.

டோனியை அணியில் இருந்து நீக்க சொல்கிறார்கள். அப்படி செய்தால் அவருக்கு சரியான மாற்று வீரராக யாரை சேர்ப்பீர்கள். டோனியின் திறமை இந்திய அணிக்கு முக்கியம்.

ஹர்த்திக் பாண்டியாவிடம் திறமை இருக்கிறது. அவர் என்னைவிட சிறந்த ஆல்ரவுண்டராக வருவார். அவர் தனது இயல்பான ஆட்டத்தை தொடர வேண்டும்.

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பையை கபில்தேவும், டோனியும் பெற்றுக் கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள். கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. அதன் பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2011-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் `2.0′ ரிலீஸ்?

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுமார் ரூ.400 கோடி செலவில் உருவாகி வரும் படம் `2.0′.

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தை வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

டீசர், டிரைலரும் தாமதமாகவே ரிலீஸ் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வெளியான வதந்தியை தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மறுத்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குஜராத் – ராஜஸ்தானில் ‘பத்மாவதி’ சினிமாவுக்கு எதிராக போராட்டம்

நடிகை தீபிகா படுகோனே நடித்த இந்திப் படம் ‘பத்மாவதி’ வருகிற 1-ந்தேதி திரைக்கு வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 13-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சித்தூர் ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி, ராணி பத்மினி மீது ஆசைகொண்டு படை எடுத்தான். இந்த காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டதாக கூறி ராஜபுத்ர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

படத்தை திரையிட தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தடைவிதிக்க மறுத்து மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தேர்தல் கமி‌ஷனில் பா.ஜனதா அளித்த புகார் மனுவும் தள்ளுபடி ஆனது.

இதற்கிடயே குஜராத், ராஜஸ்தானில் வசிக்கும் ராஜபுத்திர வம்சத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இந்து அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.

குஜராத்தில் சூரத் மற்றும் காந்திநகரில் விஷ்வ இந்து பரி‌ஷத், பஜ்ரங்தளம், ரகபூத், கர்னசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் கண்டனப் பேரணி நடந்தது.

ராஜஸ்தானில் ராஜபுத்ர சமூகத்தினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா வழிகாட்டிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மராட்டிய மாநிலம் மும்பையில் ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேச மாநிலத்திலும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதற்கிடையே ‘பத்மாவதி’ படம் டிசம்பர் 1-ந்தேதி நாடு முழுவதும் திரைக்கு வருகிறது. அன்றைய தினம் ராஜஸ்தானில் முழு அடைப்பு போராட்டம் நடத்த ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது,

‘நீட்’ தேர்வை திணிக்கவே பயிற்சி மையங்கள்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிப்பதற்கான மையங்கள் இன்று தொடங்கப்படவுள்ளன. இது தமிழகத்தின் மீது நீட் தேர்வு திணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளும் செயல் என்பதுடன், மாணவர்களை ஏமாற்றும் செயலும் ஆகும்.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு முன்பாக, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் நீட் தேர்வை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறதா? என்ற வினாவுக்கு விடை காணப்பட வேண்டும்.

நீட் தேர்வை சாதாரண நுழைவுத் தேர்வு என்பதாக மட்டும் பார்க்கக் கூடாது. கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்தது. பின்னர் தேவையே இல்லாமல் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. பொதுப் பட்டியலில் உள்ள எந்த ஒரு துறை குறித்த சீர்திருத்தமாக இருந்தாலும் மத்திய, மாநில அரசுகள் கருத்தொற்றுமை அடிப்படையில் தான் முடிவெடுக்கப்பட வேண்டும்.

ஆனால், 2010-ஆம் ஆண்டில் தமிழக அரசிடம் கருத்துக் கேட்காமல் தான் அப்போதைய காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு நீட் தேர்வை திணித்தது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும், அதன்பின் தயாரித்து அனுப்பப்பட்ட அவசர சட்டத்தையும் கொஞ்சமும் மதிக்காமல் காலில் போட்டு மிதித்தது இப்போதுள்ள பா.ஜ.க. அரசு.

நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மதிக்காமல் மத்திய அரசு ஆடிய ஆட்டத்தால் மாணவி அனிதாவின் உயிரையும், ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவையும் இழந்தோம்.

இதுகுறித்த கவலை சிறிதும் இல்லாமல், நீட் தேர்வை முறியடிப்பதற்கான சட்டப்போராட்டத்தை நடத்தாமல், மத்திய அரசின் கட்டளைக்கு பணிந்து நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டது. தமிழக அரசின் இந்த முடிவு ஊரக, ஏழை மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெருந்து ரோகம் ஆகும்.

நீட் தேர்வில் இழைக்கப்படும் துரோகம் ஒருபுறமிருக்க தமிழக அரசால் வழங்கப்படவிருக்கும் இலவச நீட் பயிற்சி மாணவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காத ஒன்றாகும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தான் இந்தத் திட்டத்தை தமிழக அரசு இன்று தொடங்குகிறது. கற்பித்தல் என்பது மாணவர்களுக்கு ஆசிரியர் நேரடியாக பாடம் நடத்துவது ஆகும்.

ஆனால், தமிழக அரசின் இலவச நீட் மற்றும் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு பயிற்சி என்பது அப்படிப்பட்டதல்ல. இது விடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் பயிற்சி ஆகும். தமிழ்நாடு முழுவதும் 412 இடங்களில் நீட் மற்றும் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த அனைத்து மையங்களும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, அங்கு நடத்தப்படும் பாடங்கள் விடியோ கான்பரன்சிங் மூலம் 412 மையங்களுக்கும் ஒளிபரப்பப்படும் என்று பயிற்சி அளிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வகுப்பறை போன்ற கட்டமைப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் தான் மாணவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அப்போது தான் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற முடியும். வீடியோ கான்பரன்சிங் முறையில் இது சாத்திய மில்லை. இந்த முறையில் மாணவர்கள் ஆசிரியருடன் உரையாட முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட 412 மையங்களின் மாணவ, மாணவியரும் தங்களின் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற முடியாது.

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் புகழ்பெற்ற பயிற்சி நிறுவனங்களின் மூலம் ஆண்டுக்கு ரூ.1.80 லட்சம் வரை கட்டணம் வசூலித்து நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாறாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு பயனற்ற பயிற்சி அளிக்கப்படுவதால் இரு தரப்பினருக்கும் கல்வி இடைவெளி அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 5 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். ஆனால், இந்த ஆண்டு அது கூட கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம். தமிழக அரசு நினைத்தால் 412 மையங்களுக்கும் மொத்தம் 1000 ஆசிரியர்களை நியமித்து நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கலாம்.

அரசு பள்ளிகளில் உள்ள கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து அவர்கள் மூலமாகவே பயிற்சி வகுப்புகளை நடத்த முடியும். ஆனால், இவற்றையெல்லாம் செய்யாமல் விளம்பரத்திற்கு நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கி தமிழ்நாட்டு மக்களையும், மாணவர் களையும் தமிழக அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தான் இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வாகும். அதற்கான சட்டப்போராட்டம் இன்னும் முடியாத நிலையில், அதை முழுவீச்சில் தமிழக அரசு நடத்த வேண்டும். இடைக்கால ஏற்பாடாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதாக இருந்தால், நன்றாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நேரடியாக மாணவர்களுக்கு பயிற்சியளிக்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மணிப்பூரில் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

மணிப்பூர் மாநிலம் சந்தல் மாவட்டத்தில் இன்று காலை அசாம் ரைபிள்ஸ் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகில் நடைபெற்றது.

குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள், மீட்புக் குழுவினரை அனுப்பி வைத்தனர். மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர்களும் அழைக்கப்பட்டுள்ளன.

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுவினர், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2 வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னையில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியது. ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்த தொடர் மழையால் வழக்கத்தைவிட அதிகளவில், அதாவது 68 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. பலத்த மழை காரணமாக வெள்ளக் காடான சென்னை இப்போதுதான் சகஜ நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது.

ஆனால், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் தெரியாத அளவிற்கு குளிர்ச்சியான சூழ்நிலை காணப்பட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

ஆனால் மாலையில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய தொடங்கியது. எழும்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, கொளத்தூர், அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, தரமணி, பெருங்குடி, தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு முழுவதும் கனமழை பெய்தது.

இதேபோல் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.