குவைத்தில் இன்ஜினீயர்களுக்கு வேலை: தமிழக அரசு நிறுவனம் அறிவிப்பு

இந்திய தொலைத்தொடர்புத்துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு இன்ஜினீயர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தமிழக அரசின் நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.சமயமூர்த்தி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”இந்திய தொலைத்தொடர்புத்துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு இன்ஜினீயர்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு பிஇ, பிடெக் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பட்டதாரிகள், சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டு பணிஅனுபவம் அவசியம். வயது 30-க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.56 ஆயிரம்.
மேலும், சிவில் மேற்பார்வையாளர் பணிக்கு டிப்ளமா தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு சம்பளம் ரூ.30,200 வழங்கப்படும். பிளஸ் 2 அல்லது டிப்ளமா தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணிஅனுபவம் உள்ளவர்கள் பைபர் ஸ்பைலைசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 22 முதல் 50-க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.26,800.
டிப்ளமா தேர்ச்சி பெற்றவர்கள் சிவில் ஆட்டோகாட் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.24,500. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு அனுபவத்துடன் குவைத் நாட்டின் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் கனரக வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.16,750. மேலும், எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் தொலைத்தொடர்புத்துறையில் 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் லேபர் பணிக்கு தேவைப்படுகிறார்கள். சம்பளம் ரூ.15,600. கூடுதல் விவரங்களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 3 ஆண்டு பணி ஒப்பந்த அடிப்படையில் தகுதி மற்றும் அனுபவத்துக்கு ஏற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம், இலவச மருத்துவம், மருத்துவக் காப்பீடு, மிகைநேர பணி ஊதியம் (ஓ.டி) மற்றும் குவைத் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.
30 மாதங்கள் செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு உரிய தகுதி இருப்பின் தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்ரும் ஒரு புகைப்படத்தை omcresum@gmail.com என்ற இ-மெயில் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய 044-22505886, 22502267 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டவுன்லோடு செய்யாதீங்க : மால்வேர் மூலம் ஆப்பு வைக்கும் ‘வாட்ஸ்ஆப் கோல்டு’.!!

ஸ்மார்ட்போன்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் மால்வேர் ஒன்று வாட்ஸ்ஆப் கோல்டு எனும் பெயரை கொண்டு இணையங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. தற்சமயம் ட்விட்டரில் அதிகம் பகிர்ந்து கொள்ளப்படும் செய்தியும் இது தான்.
குறுந்தகவல் வடிவில் இணையத்தில் வலம் வரும் இந்த மால்வேர் வைரஸ் வாட்ஸ்ஆப் செயலியின் புதிய பதிப்பினை பதிவிறக்கம் செய்ய கோரும். தவறுதலாக இதனினை இன்ஸ்டால் செய்தால் ஸ்மார்ட்போன் கருவியானது குறிப்பிட்ட மால்வேர் மூலம் பாதிக்கப்படுகின்றது.
1
குறுந்தகவல்
அதன் படி குறுந்தகவலில் வாட்ஸ்ஆப் கோல்டு பதிப்பு செயலியை பலவேறு பிரபலங்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றது.
2

அம்சங்கள்
வாட்ஸ்ஆப் கோல்டு செயலியில் வீடியோ காலிங் அம்சம், ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் வசதி, இலவச அழைப்பு, வாட்ஸ்ஆப் தீம்களை மாற்றி கொள்ளும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
3

அழைப்பு
இதோடு வாட்ஸ்ஆப் கோல்டு பதிப்பினை அழைப்பிதழ் இல்லாமல் பதிவிறக்கம் செய்ய முடியாது என்றும் கூறப்படுகின்றது.
4

லின்க்
மேலும் அழைப்பிதழில் வழங்கப்பட்டுள்ள லின்க் www.goldenversion.com என்ற தளத்திற்கு வழி செய்கின்றது, இதனை க்ளிக் செய்தால் பிழை 404 என்ற தகவல் கிடைக்கின்றது. இந்த முறைகேடில் இதுவரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
5

செயலி
இந்த செயலியானது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரிலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
6

வாட்ஸ்ஆப் ப்ளஸ்
வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலி போன்றே இதுவும் போலியானது தான் என்பதோடு இதனால் ஸ்மார்ட்போன்கள் தேவையில்லா மால்வேர் மூலம் பாதிக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
7

அறிவிப்பு
வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலியானது வாட்ஸ்ஆப் மூலம் உருவாக்கப்படவில்லை என்பதோடு இது அந்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
8

பதிவிறக்கம்
இதோடு வாட்ஸ்ஆப் நிறுவனம் குறுந்தகவல் மூலம் மற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வாடிக்கையாளர்களுக்கு வலியுறுத்தாது என தெரிவித்துள்ளது.
9

மின்னஞ்சல்
வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம் மின்னஞ்சல் போன்ற சேவையை பயன்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் குறுந்தகவல்களில் அனுப்பப்படும் லின்க்’களை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
10

பிரபலம்
வாட்ஸ்ஆப் செயலியானது தற்சமயம் வரை சுமார் 109 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது உலகில் சுமார் 55.6% ஆகும். இச்செயலியை சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதோடு இந்தியாவில் மட்டும் சுமார் 7 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக சமீபத்தில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில், மதங்களை கடந்த மனித நேயம் ஏழை இந்து வாலிபருக்கு சிறுநீரக தானம் செய்த கிறிஸ்தவ பேராயர்

கேரளாவில், ஒரு ஏழை இந்து வாலிபருக்கு கிறிஸ்தவ பேராயர் ஒருவர் சிறுநீரக தானம் செய்தார்.
பேராயர் கேரளாவில், செல்வாக்கு மிகுந்த சிரோ–மலபார் கத்தோலிக்க திருச்சபையில், பலா மறைமாவட்ட பேராயராக பணியாற்றி வருபவர் ஜேக்கப் முரிக்கன்.
52 வயதான இந்த பேராயர், ஒரு ஏழை இந்து வாலிபருக்கு தனது இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக கொடுத்து, வாலிபரின் உயிரை காப்பாற்றி உள்ளார். மத வேறுபாடுகளை கடந்த மனிதநேய செயலாக இது பார்க்கப்படுகிறது.
ஏழை வாலிபர் அவரிடம் சிறுநீரக தானம் பெற்றவர் பெயர் இ.சூரஜ் (வயது 31). ஆர்ய வைத்திய சாலையில் பணியாற்றி வருகிறார். ஏழ்மையான அவரது குடும்பத்தில், மனைவியும், தாயாரும் உள்ளனர். அவர் மட்டுமே வேலைக்கு சென்று சம்பாதித்து வருகிறார்.
சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட சூரஜ்க்கு உதவ பேராயர் ஜேக்கப் முரிக்கன் முன்வந்தார். ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள் உறுப்பு தானம் செய்வதற்கு கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள ஒரு கமிட்டி ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த கமிட்டியும் ஜேக்கப் முரிக்கன் சிறுநீரக தானம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தது.
கடந்த வாரம் இதுதொடர்பான அனைத்து நடைமுறைகளும் இறுதி செய்யப்பட்டன.
அறுவை சிகிச்சை இந்நிலையில், நேற்று கொச்சியில் உள்ள வி.பி.எஸ்.லேக்ஷோர் ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் ஜார்ஜ் பி.ஆபிரகாம் தலைமையிலான டாக்டர்கள் குழு, பேராயரின் ஒரு சிறுநீரகத்தை எடுத்து சூரஜ்க்கு வெற்றிகரமாக பொருத்தியது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும், பேராயரும், வாலிபரும் நலமுடன் இருப்பதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
பாராட்டு இதற்கிடையே, சிறுநீரக தானம் செய்த பேராயருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பணியில் உள்ள பேராயர் ஒருவர், தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக அளித்து, ஒரு உயிரை காப்பாற்றியது வரலாற்றில் இதுவே முதல்முறை என்று அருட்தந்தை டேவிஸ் சிராமல் தெரிவித்தார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.
சாம்பியன்ஸ் கோப்பை ‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி 1998–ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக 2013–ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை 2–வது முறையாக வென்று வரலாறு படைத்தது.
‘50 ஓவர் உலக கோப்பை ஏற்கனவே நடத்தப்பட்டு வருவதால் ஒரு வடிவிலான கிரிக்கெட்டுக்கு ஒரு மெகா போட்டி மட்டும் போதும்’ என்று கூறிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சாம்பியன்ஸ் கோப்பை போட்டி ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கு பதிலாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகம் ஆக இருப்பதாகவும் அறிவித்தது. ஆனால் மறு ஆண்டே டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த சாத்தியமில்லை என்று கூறிய ஐ.சி.சி. மீண்டும் 2017–ம் ஆண்டு முதல் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரும் என்று அறிவித்தது.
இந்தியா, பாகிஸ்தான் இதன்படி 8–வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 1–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு 2015–ம் ஆண்டு செப்டம்பர் 30–ந்தேதி நிலவரப்படி தரவரிசையில் டாப்–8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. துரதிர்ஷ்டவசமாக முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறவில்லை.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதன்படி ‘ஏ’ பிரிவில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன. அடுத்த ஆண்டு ஜூன் 1–ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை ஜூன் 4–ந்தேதி எட்ஜ்பஸ்டனில் சந்திக்கிறது.
ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். மொத்தம் 15 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 18–ந்தேதி நடைபெறும். மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் (ரிசர்வ் டே) நடத்தப்படும்.
தரவரிசை புள்ளி முக்கியம் போட்டி அட்டவணையை வெளியிட்டு நிருபர்களிடம் பேசிய ஐ.சி.சி. தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் கூறும் போது, ‘ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை குறுகிய காலத்தில் நடத்தப்படும் துல்லியமான ஒரு போட்டித் தொடராகும். ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் இந்த போட்டி உற்சாகமாக இருக்கும். இந்த சாம்பியன்ஸ் கோப்பை வெறும் ஒரு நாள் போட்டித் தொடர் மட்டும் அல்ல. இந்த போட்டி முடிந்து அடுத்த 3 மாதங்களில் 2019–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கான தரவரிசை தகுதி காலம் முடிவுக்கு வருகிறது. எனவே சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் மூலம் ஒவ்வொரு அணிகளும் பெறும் தரவரிசை புள்ளி மிக முக்கியமானதாக இருக்கும்’ என்றார்.

கபாலி ரஜினிக்கு மலேசியா அரசு செய்த மரியாதை!

மலேசியாவுக்கு தமிழ்ப்படங்களின் யூனிட் எப்போது படப்பிடிப்புகளுக்கு சென்றாலும் அங்குள்ள அரசு நல்ல வரவேற்பும், உதவிகளும் செய்து வருகிறது. அந்த வகையில், ரஜினி தனது கபாலி படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியா சென்றபோது அங்குள்ள அரசு அவருக்கு வரவேற்பு கொடுத்தது. அதோடு கபாலி படப்பிடிப்பு நடத்த போதுமான வசதிகளையும் செய்து கொடுத்தது. இதனால் திட்டமிட்டதை விட மலேசியாவில் அதிக நாட்கள் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தினார் டைரக்டர் ரஞ்சித்.
இந்த நிலையில், தமிழகத்தைப்போலவே மலேசியாவில் உள்ள ரசிகர்களும் கபாலி படத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்களாம். அதோடு, ரஜினியின் கபாலி படத்துக்கு மரியாதை செய்யும் வகையில், கபாலி ரஜினியின் உருவம் பொறித்த போஸ்டல் ஸ்டாம்ப் ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டில் ரஜினிக்கு கிடைத்திருக்கும் இந்த மரியாதையை ரஜினி ரசிகர்கள் இணையதளங்களில் வெகுவாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.

மீரட்டில் செல்ஃபி எடுப்பதாக கூறி மனைவியை ஆற்றில் தள்ளி கொன்ற கணவன்

உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் அப்தாப் (வயது 30) அவரது மனைவி பெயர் ஆயிஷா (வயது 24) ஆகிய இருவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்து கொண்ட நாள் முதல் மனைவியை வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார் அப்தாப். இதனால் மனைவி தரப்பில் இருந்து பணம் ஏதும் தேறாது என்று தெரிந்ததும் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.
இந்நிலையில் நேற்று மனைவியிடம் அன்பாக இருப்பது போல் நடித்துள்ளார். மனைவியை கங்கை ஆற்றுக்கு கூட்டி சென்று அதன் முன் செல்ஃபி எடுக்கலாம் என்று கூறியுள்ளார். கணவனின் திட்டத்தை அறியாத ஆயிஷா கணவன் ஆசையாக கூப்பிட்டதால் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்ட அப்தாப் கட்டிய மனைவி என்று பார்க்காமல் திடீரென ஆற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தார். 
இது குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் ஆயிஷா கங்கை ஆற்றில் தவறி விழுந்து விட்டார் என்று கூறி உள்ளார்.   இதுகுறித்து ஆயிஷாவின் சகோதரர் புகார் அளித்தார். அதில் அப்தாப் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார். அப்தாப்பை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 
முதலில் போலீசாரை திசை திருப்பும் வகையில் கதை கட்டினார். அதில் எங்களிடம் சிலர் கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது, எனது மனைவியை அவர்கள் ஆற்றினுள் தள்ளி விட்டனர் என்று போலீசாரிடம்  கூறினார். ஆனால் ஆயிஷாவின் சகோதரர் தனக்கு அப்தாப் மீது தான் சந்தேகம் இருப்பதாக உறுதியாக கூறினார். அதனை தொடர்ந்து, அப்தாப்பிடம் போலீசார் உரிய வகையில் விசாரணை  நடத்தினர். 
அப்போது மனைவியை நான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார். ஆற்றினுள் இருந்து ஆயிஷாவின் சடலத்தை மீட்டுள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

படப்பிடிப்புக்கு அடிக்கடி மட்டம் போடும் நடிகை!

சங்கம் படத்தில் நடித்து பெயர் பெற்ற ஊதா நடிகை, பல படங்களில் நடித்து வருகிறாராம். இவர் நடித்த அத்தனை படங்களும் ஹிட் என்பதால் இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறதாம். இதனால் சம்பளத்தையும் கணிசமாக உயர்த்திவிட்டாராம். இந்த நிலையில் தற்போது ஊதா நடிகை என்றால் தங்களது படங்களில் நடிக்க வைக்க சில தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்களாம்.

ஊதா நடிகை இப்போது எந்த பட சூட்டிங்கிற்கும் ஒழுங்காக போகாமல் சொதப்பி வருகிறாராம். ஒரே நாளில் இரண்டு படத்துக்கு கால்ஷீட்டு கொடுத்துவிட்டு குழப்பத்தில் இருப்பதுடன் இடையிடையே ஐதராபாத்துக்கும் ஓடிப்போயிடுகிறாராம். தெலுங்கு படத்தில் நடிக்காத சூழ்நிலையில் ஐதராபாத்துக்கு ஏன் ஓடிப்போகிறார் என்பதும் புரியாத புதிராக உள்ளதாம். இதனால் ஊதா நடிகை பக்கம் போக நினைக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இப்போ ரொம்பவே யோசிக்கிறாங்களாம்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா

 லண்டன்,
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டித்தொடர் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்த போட்டித்தொடரில் கிரிக்கெட் போட்டித்தொடரின் பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஈட்பங்ஸ்டன் மைதானத்தில் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
ஜூன் 1 ஆம் தேதி துவங்கி 18 ஆம் தேதி வரை 18 நாட்கள் நடைபெறும் இந்த போட்டித்தொடரின் முதல் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டித்தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.  குரூப் -ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும் , பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி போட்டிகள், ஜூன் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் முறையே கார்டிப் மற்றும் ஈட்பங்ஸ்டன் மைதானத்தில் நடைபெறுகின்றன. ஜூன் 18 ஆம் தேதி ஓவல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி

புதுச்சேரியில் இன்னும் புதிய அரசு பதவியேற்காத நிலையில், அங்கு புதிய துணைநிலை ஆளுனராக பதவியேற்றுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி பல புதிய அறிவிப்புக்களை அதிரடியாக அறிவித்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி துணைநிலை ஆளுனராக பதவியேற்றுக் கொண்ட கிரண்பேடி, 1031 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளார். ஜூன் 8 ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் இந்த அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு மக்கள், லஞ்சம், ஈவ் டீசிங், சமூக விரோத செயல்பாடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களை அளிக்கலாம். புதுச்சேரியை அமைதியான யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்காக குற்றங்களை தடுக்கவும், சாலை பாதுகாப்பை மேற்படுத்தவும் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இலவச அழைப்பு சேவை எண் மூலம் அளிக்கப்படும் புகார்கள் மிக ரகசியமாக வைக்கப்படும் எனவும் கிரண்பேடி உறுதி அளித்துள்ளார். புகார் அளித்தவர் பற்றிய விபரம் போலீஸ் ஐஜி மற்றும் தலைமை செயலருக்கு மட்டுமே தெரியும் வகையில் இந்த புகார்கள் பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொய் புகார்கள் அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குற்றம் தொடர்பாக புகார் அளிப்பவருக்கு உரிய நீதி பெற்று தரும் போலீசாருக்கு பரிசு வழங்கப்படும். கல்வித்துறை செயலர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் ஆகியோர் பள்ளிகளுக்கு அதிரடி விசிட் செய்து ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். இதே போன்று மருத்துவமனைகைளுக்கு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார். விளம்பர பலகைகள், ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வேண்டும். விஐபி.,க்கள் வருகைக்காக போக்குவரத்தை நிறுத்த கூடாது எனவும், இந்த உத்தரவுகள் ஒரு வாரத்திற்குள் அமலுக்கு வர வேண்டும் எனவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார். காலில் விழும் கலாச்சாரத்துக்கு கண்டனம்: விஐபி கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்பதை தனது பதவியேற்பு விழாவிலேயே கிரண்பேடி மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு விழாவில் தனது காலில் விழுந்த ஒரு பெண் எம்.எல்.ஏ.,வின் காலில் பதிலுக்கு விழுந்து வணங்கிய கிரண் பேடி, காலி்ல விழுந்து வணங்கக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்.